Followers

Search Here...

Saturday 3 February 2018

உண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம்.

உண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம்? என்ற கேள்விக்கு, சாஸ்திரம் என்ன பதில் சொல்கிறது.

விபீஷணன், ஸ்ரீராமரிடம் சரணாகதி என்று வந்த சமயத்தில், அனைவரும் "இவனை சேர்த்து கொள்ள கூடாது" என்று பல காரணங்கள் ஸ்ரீராமரிடம் கூறினர்.

சுக்ரீவன், "சொந்த அண்ணனை போர் வந்து விடும் என்ற நிலையில், விட்டு விட்டு, நம்மிடம் வருகிறான் என்பதே சந்தேகத்துக்கு வழி வகுக்கிறது" என்றும் சொன்னான்.


ஸ்ரீ ராமர் புன்சிரிப்புடன், லக்ஷ்மணரை பார்த்து கொண்டே, "எல்லோரும் பரதனை போல சகோதரன் ஆகி விட முடியுமா?" என்று சொல்லி,

தான் பகவான் என்று சொல்வதை விட, தசரதன் மைந்தன் என்று சொல்லி கொள்ளவே ஆசைப்பட்ட ஸ்ரீராமர், தன்னை பற்றி பொதுவாக, உயர்த்தி எங்கும் பேசிக்கொள்ள ஆசைப்படாதவர், சுக்ரீவனை பார்த்து,
"ஒரு தகப்பனுக்கு என்னை போல மகன் கிடைத்து விடுவானா?" என்று பெருமிதமாக சொன்னார்.

ஸ்ரீ ராமர், லக்ஷ்மணரை பக்கத்தில் வைத்து கொண்டே, "பரதனை போல ஒரு சகோதரன் உண்டா ?" என்று உயர்த்துகிறார்.

அண்ணனுக்காக, 14 வருடமும் தூங்காமல்,
அண்ணனுக்காக 14 வருடமும் தன் மனைவி, தன் தாயை விட்டு, ஸ்ரீராமருக்கு சேவையே லட்சியம் என்று வந்த லக்ஷ்மணனை அருகில் நிற்க வைத்துக்கொண்டே, ஸ்ரீ ராமர், இப்படி சொன்னார் என்று நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

லக்ஷ்மணர் முகமும் இதனால் சுருங்கவில்லை. லக்ஷ்மணர் அமோதித்தது புரிகிறது.

லக்ஷ்மணரை விட பரதனே சிறந்த   சகோதரன் என்ற ஸ்ரீ ராமரே சொல்லி விட்டார்.
அது மட்டுமில்லை, தனக்கு கிடைத்த பரதனை போன்ற சகோதரன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றார்.

ஸ்ரீ ராமர், வேதங்களை, சாஸ்திரங்களை அறிந்தவர். அவர் பேசும் ஒவ்வொரு சொல்லும்,  வேத சாஸ்திரமானது.

உண்மையான சகோதரனை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற கேள்விக்கு, சாஸ்திரம் பதில் சொல்கிறது.
"சொத்து விவகாரங்கள் நடக்கும் போது, உண்மையான சகோதரன் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்கிறது சாஸ்திரம்.

"அண்ணனோ, தம்பியோ, சகோதரியோ, சொத்து விவகாரம் என்ற பேச்சு ஏற்பட்டவுடன் அதை பற்றியே பேசாமல், முடிந்தவரை பேச விரும்பாமல், அது தன் சகோதரனுக்கு போனாலும் போகட்டும் என்று அதை பற்றி விவாதம் செய்ய கூட விரும்பாமல், விலகி நிற்கிறானோ, அவனே உண்மையான சகோதரன்", என்கிறது சாஸ்திரம்.

14 வருடம் தான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில், ஸ்ரீராமரே மகிழ்ச்சியுடன், பரதன் 14 வருடம் அயோத்தியை ஆளட்டும் என்று ஸ்ரீராமர் சொல்லியும், சொத்து அனைத்தையும் தம்பி பரதனுக்கு கொடுத்தும், யாரும் எதிர்க்காத நிலையிலும், சொத்து வேண்டாம் என்று சொல்லி விட்டார் பரதன்.

சொத்து பகை என்ற சமயத்தில், தனக்கு கிடைத்த சொத்து வேண்டாம், என்று இருந்த பரதன், சாஸ்திரப்படி உண்மையான சகோதரன் என்று ஆகிறார்.

பொதுவாக, சொத்து சண்டையால், சகோதரர்கள் சந்தியில் (வீதியில்) நிற்கிறார்கள் என்று சொல்வதுண்டு.

ஆனால், ஸ்ரீ ராமாயணத்தில், சொத்து சண்டையால், சகோதரர்கள் (ஸ்ரீராமரும், பரதனும்) சேர்ந்து இருக்க, சொத்து வீதியில் நின்றது.

இதையும் காரணமாக கொண்டு, ஸ்ரீராமர், "அனைவருக்கும் என்னுடைய பரதனை போல சகோதரன் கிடைத்து விடுவானா?" என்கிறார்.

தசரதர் பரலோகம் சென்ற பின்னர், ஸ்ரீ ராமர், லக்ஷ்மணரை பார்த்து ஒரு சமயம்,
"அப்பா இல்லாத குறையே இல்லாமல், நீயே எனக்கு அப்பாவாக இருக்கிறாய். நீ என்னை நம் அப்பா பார்த்து கொள்வது போல, எனக்காக உன்னை வருத்தி கொண்டாலும், அதை பொருட்படுத்தாமல், என்னை உன் குழந்தை போல பாதுகாக்கிறாய்" என்றார்.

ஹனுமான், சீதையை அசோகவனத்தில் பார்க்கும் போது, சீதையும் அதே போல, "தன் கணவனுக்கு அப்பாவாக இருந்து வரும் லக்ஷ்மணனையும் விஜாரித்ததாக சொல்லுங்கள்" என்றாள்.

இதன் மூலம், ஸ்ரீ ராமர், லக்ஷ்மணனை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து இருந்தார் என்று தெரிகிறது.

கடைசியாக, சிறந்த மகன் யார் என்று ஸ்ரீராமர் தியானிக்கும் பொழுது, வேறு வழியே இல்லாமல், தான் மட்டுமே சிறந்த பிள்ளை என்ற சத்தியத்தினால்,
"என்னை போல ஒரு மகன், ஒரு தகப்பனுக்கு கிடைத்து விடுவானா?"
என்றார் ஸ்ரீராமர்.

தசரதர் கைகேயிக்கு 2 வரங்களை கொடுத்தார்.
அந்த வரத்தை பயன்படுத்தி, சத்தியத்தை (சொன்ன வாக்கை) மீறாத தசரதரிடம், 14 வருடம் ஸ்ரீ ராமர் வனவாசம், பரதன் அயோத்தி ஆள வேண்டும் என்று கேட்டு விட்டாள்.

தசரதர் உயிரே போனாலும், சத்தியத்தை மீற கூடாது என்ற கொள்கை உடையவர்.

இந்த 2 வரங்களை பற்றி ஸ்ரீ ராமரிடம் சொல்லி, தான் சத்தியத்தை மீற முடியாது, என்பதால், "நீ என்னை சிறையில் தள்ளியாவது, அயோத்தி அரசனாக பட்டம் சூட்டிக்கொள்." என்றார்.

தசரதர் உயிர் மூச்சாக "சத்யம்" என்ற தர்மத்தை, அவர் காலம் முழுவதும் கடைபிடித்தார். சொன்ன சொல் தவற மாட்டார்.

தசரதர் அவர் மனைவிக்கு செய்த சத்தியத்துக்கு, தான் 14 வருடம் காட்டுக்கு போக அவசியமே இல்லை. எளிதாக மறுத்து விடலாம்.
தசரதர் சொன்னது போல, அவரையே சிறையில் தள்ளி, தானே மகுடம் சூட்டி கொள்ளலாம்.

இப்படி எந்த வழியும் தேவையில்லை. தான் 14 வருடம் காட்டுக்கு போவதால், தன் தந்தையின் தர்மம் காக்க படுமானால், தான் எதற்கும் தயார் என்றார் ஸ்ரீ ராமர்.

இப்படி தன் தந்தையின் தர்மத்துக்கு களங்கம் ஏற்பட கூடாது என்று, எதையும் தியாகம் செய்வேன் என்று வந்த ஸ்ரீ ராமர், யார் சிறந்த புதல்வன் என்ற கேள்விக்கு, வேறு யாரும் தனக்கு நிகராக இல்லாததால், தன்னையே காட்டிக்கொண்டார்.

இப்படி தன் தர்மம் காக்கப்பட, மகனான ஸ்ரீராமர் காட்டுக்கு செல்ல, அப்படிப்பட்ட உன்னதமான மகனை இழந்த தசரதர் உயிர் வாழ முடியாமல், பரலோகம் சென்று விட்டார்.

பொதுவாக பேச்சுக்கு தன் பிள்ளையை, "கண்ணே, மணியே" என்று பெற்றோர் சொல்வதுண்டு.

ஸ்ரீ ராமரை பிரிந்தவுடன், தசரதர் உண்மையிலேயே "கண் பார்வை இழந்து விட்டார்". பிரிவு தாங்காமல், உயிரையும் விட்டு விட்டார். 

No comments:

Post a Comment